Monday, December 31, 2007

முதல் முத்தம்...

என் நாசிக்குள் புகுந்துக்கொண்டிருக்கும்
உன் மூச்சின் அடர்த்தியில்
உள்ளங்கையின் நோக்கங்களை தொடர்ந்துபோக
சிரமமாகிவிடுகிறது ஒவ்வொரு முறையும்.

உன் கைக்குள் சுருங்கிகொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக்கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கி பயணித்துப் பின்
வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன

வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேக தடைகளும்.

Friday, December 28, 2007

எங்கிருந்தாலும் வாழ்க...

உயிராய் வந்தவன் நீயே
உடன் பிறந்த்தோர் கையினாலே
உன் வாழ்வு அழிய வேண்டாம் என்று
உள்ளமதை அழித்தேனே

கண்ணீருடன் நீ போகையிலே
கலங்கி நின்றேன் நான் அன்று

சீரான பாதையிலே
சிறப்பாக சென்ற மனம்
தோளோடு உன்னை அணைக்க
தோற்றுத்தான் நின்றதுவே

உன் மனதில் நான் இருந்தேன்
என் நினைவில் நீ இருப்பாய்
வான் நிலவு சாட்சியாக
வாழ்வு தான் கொண்டு விட்டாய்

உன்னை இனிப் பார்க்க
என் மனதில் சக்தி இல்லை
என்னவனாய் இருந்தவனே
எங்கிருந்தாலும் வாழ்க

Wednesday, December 26, 2007

சங்கமம்

உன் வார்த்தைகள் மெளனமாக
என்னோடு உறவாட - என்
மெளனங்கள் வார்த்தையாக
உருப்பெற நம்முள்
உருவான காதல் உயிரோடு
இரண்டறக் கலந்தன...

உன் மெளனம் கலைத்து
ஒர் வார்த்தை பேசாயா
என காதுகள் தவம் இருக்க - நம்
விழிகள் ஆயிரமாயிரம் வார்த்தைகள்
பரிமாறிக் கொண்டன....

நினைவு என்னும் பெட்டகத்தில்
விழி பேசும் வார்த்தைகள்
காவியமாக உருப்பெற்றுக் கொண்டிருந்தன
இதயத்தின் துணையுடன்....

என் உயிர் அவனோடு சங்கமிக்க
அவன் உயிர் என்னோடு கலக்க
நம் உயிர்களை இடம் மாற்றிக்கொண்டோம்..

Tuesday, December 25, 2007

என்னருகில் வருவாயா???

மறந்து போக நினைக்கின்றேன்
மங்கை மனம் கனக்கிறதே
பறந்து செல்ல துடிக்கின்றேன்
பேதை மனம் பதைக்கிறதே

தூர தேசம் செல்ல எத்தணிக்கிறேன்
தூயவளின் இதயம் துடிக்கிறதே
பரலோகம் நுழைய முனைகின்றேன்
சொர்க்கமே நீ என்னருகில் வருவாயா ...

Wednesday, December 19, 2007

தோல்வி தந்த பரிசு!

உனக்கு நானும்..
எனக்கு நீயும்..
போட்ட நிபந்தனையில்
நான் தோற்றுப்போனேன்.
என் தோல்விக்கு காரணம்
நீ போட்ட நிபந்தனையல்லப்
பெண்ணே..
நீதான்..
அது என்ன பொல்லாத
நிபந்தனை என்று யாரும்
கேட்கலாம்..
சொல்லிவிடாதே..
இன்றொருநாள்..
பேசிக்கொள்ளமல் இருக்கவேண்டுமென
சொல்லிக்கொண்டோம் என்று..
சிரிப்பார்கள்..
கணவன் மனைவிக்குள்
இதென்ன விளையாட்டு என்று..
தோற்றது நானாக
இருந்தாலும்..பரிசு
இருவருக்கும்..

Friday, December 14, 2007

விழி...

வழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...

Thursday, December 13, 2007

காதல் அழிவதில்லை

எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?

மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?

கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?

அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?

நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா?

நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்...

காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...

ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....

Wednesday, December 12, 2007

மறக்க முடியுமா???

மறக்கமுடியுமா..
என் பள்ளி நாளை
மனதில்
பட்டாம்பூச்சி
பறந்தநாட்களை
மறக்கமுடியுமா..

சின்னவயதில்..
துள்ளிச்சிறகடித்த
பழைய நாளை
மறக்கமுடியுமா..

சோவென்று மழைகொட்ட
புத்தகப்பையை
தூக்கி
எறிந்து..
சேற்றில் காலடித்து..
குளித்து
மகிழ்ந்ததுவும்..
காய்ச்சல் வந்து..
வீட்டில்..எல்லாரும்..
விழுந்து விழுந்து
கவனித்ததுவும்..
மறக்கமுடியுமா..

சுற்றுலா நேரத்தில்..
வாத்தியாரை ஏய்த்துவிட்டு..
பிரிந்து சென்று..
மகிழ்ந்ததுவும்..
பேச்சு விழுமென்று..
விட்டுவிட்டு போனதாக.
அழுது நடித்ததுவும்
மறக்கமுடியுமா..


பிரியும் நாளில்
நெஞ்சு கனத்து..
நண்பரெல்லாம்
அழுததையும்..
கணக்காசிரியர் காலைத் தொட்டு
ஆசி பெற்றதையும்..
என்னாயுள் நாளில் என்றேனும்..
மறக்கமுடியுமா..
எப்படி முடியும்.

Tuesday, December 11, 2007

ஸ்ருதி

திருவான்மியூர்,19 ஆவது குறுக்குத் தெருவில் இருந்து கொண்டு சென்னையில் இருப்பதாய் நினைக்க முடிகிறதில்லை.

குறைந்த பட்சம் அடையாறுக்காவது வீடு மாற்றியிருக்கலாம்.அப்பாவுக்கு ஏனோ இந்த நினைப்பிற்காகவே அவர் நிறைய செலவு செய்ய,அவர் பாணியில் சொன்னால் எனக்கு அழ நேர்ந்திருக்கிறது.அவரை அழ வைத்து வாங்கியதுதான் இந்த டூவீலர்.சென்னைக்கும் எனக்கும் இருக்கும் ஒரே ஒரு கம்யூனிகேஷன்.அடையாறு தாண்டி பீச் ரோடில் வண்டியில் அழுந்தும்போது கிடைக்கும் எதிர்காற்றின் உற்சாகத்திற்காகவே பல முறை பெட்ரோல் போட வேண்டியதாயிருக்கிறது.

"சுகன்,டீவியை மெல்ல வைப்பா ,ஏன் அலறிகிட்டிருக்கு?"அம்மாவின் சத்தத்திற்கு அவசரமாய் ரிமோட் எடுத்து வால்யூம் குறைக்க படக்கென்று இருள் சூழ்ந்தது.

"Fuse போயிருக்குமோ?""அம்மா...ஏன் இந்த வாசல் கதவை பூட்டியே வச்சிருக்க? வீதியிலே என்ன நடக்குதுன்னு ஒண்ணும் தெரியறதில்ல...எங்கயோ வானாந்தரத்தில இருக்குற மாதிரியிருக்கு..."பதிலேயில்லை...இரண்டு முறை கத்தினால்தான் அம்மாவிடமிருந்து 'ம்' என்ற கவனிப்பையாவது வாங்க முடிகிறது.

எல்லாஇடத்திலும் கரண்ட் இல்லாது போனதில் ஒரு நிம்மதி. லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ஜன்னல் திறந்து வைத்து உட்கார்ந்தேன்.டெலிவிஷன்: வந்தபிறகு ,இந்த மாதிரியான மின்சாரமற்ற நேரங்களில்தான் நிறைய விஷயங்களை யோசிக்க முடிகிறது.விஷயங்களென்ன மண்ணாங்கட்டி விஷயங்கள்? ஸ்ருதியைப்பற்றித்தான் எல்லா யோசிப்புகளும்.

மழை.. இரவு ...ஸ்ருதி.நிறைய பாதித்த விஷயங்கள். என் ஆக்கிரமிப்புக்கு அகப்படாத விஷயங்கள். அடிக்கடி அசட்டுத்தனத்தில் தள்ளிவிட்ட விஷயங்கள்.ஸ்ருதி இசையின் சூட்சுமம்.நல்ல பெயர். நல்ல ரசனை.

உங்கப்பாவுக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்குமா?இந்த மாதிரியான ஒரு மழை இரவில், மெழுகுவர்த்தியின் அவசியத்துக்காக வீடு வந்த ஸ்ருதியுடன் நடந்த முதல் சாம்பாஷணை.கிளுக்...கென்று சிரிப்பொன்று என்னைக் கடந்து அம்மாவின் சமையலறைக்குள் கரைந்து போனது. கிள்ளிவிட்டது மாதிரியொருகோபம் நாற்காலியிலிருந்து ஜன்னல் முன் உட்கார வைத்தது.

"குடையை எடுத்துட்டு வரலையாடி? நல்ல பொண்ணு போ ...தலையைத் துவட்டு...""சுகன் குடை எடுத்துக்கொடுப்பா...ஏற்கனவே நனைஞ்சு வந்திருக்கா குழந்தை..."
குழந்தையாம்... அம்மாவுக்கு எல்லாருமே குழந்தைகள் தான்.வித்தியாசம் பார்க்கத் தெரியாது. விஷமச் சிரிப்பு அறியாத வெகுளிக் குழந்தை அம்மாதான்.

ஜன்னல் கம்பிகளுக்குப்பால் என் கோபம் வெறித்துக்கொண்டிருந்த சமயம்நிலவொன்று கம்பிகள் வழியே முகம் காட்டியது.கம்பிகள் பேச ஆரம்பித்தன."என்ன மிஸ்டர் சுகன்...உங்கப்பா பெரிய சுகவாசியோ?"சுளுக்கென்ற சிரிப்பு மறுபடியும் மெல்ல அவிழ்ந்து என்னை உடைத்து உருகி கரைந்தது.

அதற்கப்புறம் ரொம்ப நேரம் பேசாமலிருந்தன கம்பிகள்.மழை புதிய வேகத்துடன் மீண்டும் ஆரம்பித்தது.

"செல்வம் சீக்கிரம் அயர்ன் பண்ணிக் கொடுப்பா... மணி ஏழரை ஆவுது...ஸ்ருதி உள்ள பரந்துக்கிட்டிருப்பா...அவசரம் அவசரம்னு..."ஸ்ருதியின் அம்மாவோ?மெல்ல கேட் தாண்டி பார்வை போனது...இல்லை"என்ன சுகன் நீயும் செல்வத்துக்காகத்தான் நிக்கறியா?"மகளிடம் அன்று வழிந்தாயிற்று..இப்போது அம்மாவின் விசாரிப்புக்கு...சிரித்தபடியே நகர்ந்தேன்.

எதேச்சையாய் பார்வை மேலே விலகமாடியில் ஸ்ருதி நின்றிருந்தாள் என்னைப் பார்த்தபடி...'சே.. என்ன அசட்டுத்தனம்'மனதிற்குள் நொந்தவாறுதிரும்பி அப்புறம் ஒரு வாரம் வரை அவளைப் பார்க்கவேயில்லை.

ஒரு பெண்ணுடன் பேசுவதற்கு என்ன விஷயங்களிருக்கின்றன என்னிடம்?மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கும் என்னுடைய சில நண்பர்களால் எழுந்த சந்தேகம்.இது ஒருபுறமிருக்க,கேள்வியே தவறு என்கிறது நண்பர் வட்டம்.இந்த உலகத்திலேயே,பெண்களுடன் மட்டும்தான் விஷயமே இல்லாமல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்க முடியும் என்கிற மாதிரியான அபிப்ராயமும் அதற்கான சாட்சிகளும் வைக்கப்பட்டன அவர்களிடமிருந்து.

ஸ்ருதியுடனான அந்த முதல் சந்திப்புக்கப்புறம் நிறையமுறை அவளைப் பார்க்க நேர்ந்திருக்கிறது.பஸ்ஸிற்காக தெருமுனை தாண்டி நடக்கையில்... பஸ்ஸ்டாப்பில் காத்திருக்கையில்...இந்தச் சமயங்களிலெல்லாம் இவன் எனக்கு பழக்கமானவன் என்கிற மாதிரியான சிநேக கவனிப்பொன்று கண்ணசைவிலோ, சிரிப்பிலோ எனக்கு அவளால் தரப்பட்டு வந்திருக்கிறது.

இந்த நினைப்புகளுடன் நானிருக்கையில் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது அவளிடம் பேச.ஏற்பட்டதென்ன., நானே உருவாக்கிக் கொண்டதுதான்.டூவிலர் வாங்கிய புதுசில் .மறுபடியும் அன்றைக்கு தூறலுடனிருந்தது சென்னை.சாயந்திரங்களில் காலேஜிலிருந்து அவள் புறப்படுகிற நேரமும் பஸ்ஸூம் மனப்பாடமாக தெரிந்துகொண்டு...இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இப்படி பேச வேண்டும் என்று மனப்பாடம் செய்து கொண்டு வேண்டும் என்று மனப்பாடம் செய்து கொண்டு ராஜதந்திரத்துடன் போனேன்.

ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவளிடம் டூவீலர் ஸ்லோவானது.ஹலோ சுகன், ADs ல வர்ற மாதிரி சரி காம்பினேஷன் நீங்களும் உங்க பைக்கும்.வெள்ளோட்டம் எப்படி காயம் கீயம் இல்லாமப் போச்சா? ஹாய் கீத்... இது சுகன்...எங்க பக்கத்து வீட்ல... சொல்லிமுடிக்கும்முன் கீதாவா, அந்தப் பெண்ணிடமிருந்து ஹாயும் சிரிப்பும் இன்ஸ்டன்ட் ஆக வந்தன.

நினைப்பதொன்று நடப்பதொன்றாக.நான் ஏதோ பெரிய விஷயமாக நினைத்து வந்ததை இவ்வளவு EASY ஆகப் பண்ணி விட்டதே இந்தப் பெண்.மழை வர்ற மாதிரி இருக்கே... நான் உன்னை டிராப் பண்ணட்டுமா?இதில் இவள் என்னுடன் என்ன மாதிரியான உறவை வைக்க விரும்புகிறாளென்பது தெரிந்து விடும்.What's going to be her choice now?பைக் ஆர் பஸ்...

ஆட்டோ...என்றாள் ஸ்ருதி.ஒன்றும் புரியவில்லை எனக்கு ,இது என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ்.நீங்களும் உங்க பைக்கும் மழைல நனையலாம்...ஸ்ருதி மாதிரி அழகான பெண் பிள்ளை மழைல நனைஞ்சா எங்கம்மாவுக்கு கோபம் வருமே... வேணா ஒண்ணு பண்ணாலாம் நீங்களும் பைக்க விட்டுட்டு ஆட்டோல வரலாம்....
Bye!Bye!மழை பெய்ய ஆரம்பித்தது...
இரவு முழுக்கா பெய்து மறுநாள் காலை வரை...
அப்பா..
என்ன சுகன்?
மழை அதிகமாயிருக்கு ...கொஞ்ச நாள் பஸ்லயே போறேன்...
பேஷா,... யார் இந்த வீட்ல உன்னையைத் தடுக்கிறது? அப்பா சிரித்தார்.
சிரித்தேன்.ஸ்ருதியையும் நேற்றைய Situation யையும் நினைத்து.

ஸ்ருதி ...புத்திசாலித்தனம்... ரொம்பவும் ஆபத்தான புத்திசாலித்தனம்...அவளை உள்ளாற எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

"எப்படி இருப்பா உன் ஆளு?" வட்டம் கேட்டது."பார்த்துட்டு வந்து சொல்றேன்."கரப்பான் பூச்சி பார்வையை வீசிவிட்டு நகர்ந்து போனது நண்பர் வட்டம்.காதலிக்கிற அல்லது காதலிக்கலாமா என்று யோசிக்க வைக்கக் கூடிய ஒரு பெண்ணிடம் பெண்ணிடம் முகந்தவிர வேறெங்காவது உங்களால் பார்க்க முடிந்திருக்கிறதா?

சரி ஸ்ருதியை நான் காதலிக்கிறேனா?காதல்னா?அன்புஅன்புன்னா நான் என் அம்மாவின் மேல் வத்திருப்பது,அப்பாவுக்கு என்மேல் இருப்பது ,சகோதிரியின் பால் இருப்பது...எல்லாமே அன்புதான்.பிறகு காதலுக்கென்ன ஸ்பெஷாலிட்டி?

இயல்புக்கு மீறிய ஒரு முக்கியத்துவம்?சந்தேகங்கள்? சங்கடங்கள்? சாவுகள்?சரித்திரங்கள்? சமாதிகள் ? நான் உன்மேல் அன்பு வைத்திருக்கிறேன் என்பது நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று ஆணாலோ,பெண்ணாலோ எடுத்துக் கொள்ளப்படுமா?சரி அன்பு இல்லையென்றால், காதலுக்கு எந்தமாதிரியான Definition?
"Define காதல்"என்றேன் ஸ்ருதியிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கையில்,

"தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது,நேராக மூக்கைத் தொடுவது சலித்துப் போனதால் ஏற்பட்ட மாற்று வழி. தொட்டபின் எல்லாமே ஒன்றுதான்.

"இந்த விளக்கம் பெண் வர்க்கத்துக்கும் சேர்த்துதானே?

Yes... ஆனா ஒரு விஷயம் காதல்ங்கிற உணர்வைக் குற்றம் சொல்ல வரலை..ஏன்னா தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவது தப்புன்னு யாரும் சொல்லமுடியாது...இன்னும் சொல்லப் போனாஒரு ஆண் பெண்ணைக் காதலிப்பது ஆசை...ஒரு பெண் ஆணைக் காதலிப்பது நம்பிக்கை...சரி ஏன் சுகன் போரடிக்கிற? யாரையாவது லவ் பண்றியா? யார் அந்தப்பொண்ணு? ஸ்ருதி கேட்டாள்.

ஏன் அந்தப்பொண்ணு நீயா இருக்கக் கூடாது என்றேன்? தைரியமான சுகன் இன்றைக்குத்தான் இந்த நிமிடத்தில்தான் எட்டிப்பார்க்கிறான்.

கேள்வி இன்னும் அந்தரத்திலேயே நின்றது...

சொதப்பிட்ட சுகன் என்றாள் ஸ்ருதி.

சொதப்பலா எப்படி? கேள்வி அதிர்ந்தது...
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டையொன்று...
வைரமுத்து அனுபவம் எனக்கு.

பின்ன வித்யாசமான கிளைமாக்ஸ் எதுன்னா வச்சுருப்பன்னு பார்த்தா நான் எதிர்பார்த்த கிளைமாக்ஸையே வச்சுருக்கியே என்றாள்...

எதிர்பார்த்தியா ஸ்ருதி..?

பின்ன...சுகனுக்கு முன்னாடியே ஸ்ருதி காதலிச்சாச்சே..

முகம் தெரியாத அந்த நபர் மேல் பொறாமை வந்தது.

எனக்கு...டைமாவது...பைக்ல lift கொடுக்கறியா என்றாள் ஸ்ருதி..

பேசிக்கொள்ளவேயில்லை நடுவில்.
முகத்தில் அடித்த பீச் காற்றை,பில்லியனில் உட்கார்ந்திருந்த உண்மை வேர்க்க வைத்துக் கொண்டிருந்தது.

மறுநாள் வழக்கம்போல் பஸ்ஸ்டாப்பில் தானாய் டூவீலர் நின்றது.ஏறிக்கொண்டாள்.

"ஸ்ருதி..."

"ம்ம்"

"நேரா வீட்டுக்கா?"

"நீ எங்க போகணும்னு நினைக்கிற?"

"உன்னை பாதிச்ச ஆளை...என்னைய விட பாதிச்ச Personality-ய நான் பார்க்கணும்".

"சரி ஈகோப்பா உனக்கு...சுண்டல் வாங்கி தர்றியா.. பீச் போகலாம்."

"உன்னோட Lover அ நான் பார்க்கணும்"என்றேன் உறுதியாக.

"அதான்ப்பா பீச் விஸிட்டோட மெயின் purpose "என்றாள்.
கடல் நுரைத்துக் கொண்டிருந்தது.

"நீதாம்பா அந்த personality"என்றாள்.

"என்ன விளையாடறியா?"

"ஏன் உனக்கே நம்பிக்கையில்லையா"

"அப்ப நீ என்னை லவ் பண்ற அப்படித்தானே?"

"சந்தேகம்,...சந்தேகம்...YEs"நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம் சரி... இதுக்கு அப்புறமா என்ன பண்ணலாம்?" ஸ்ருதி கேட்டாள்.

என்ன கேள்வி இது திகைப்பாயிருந்த்து...

"காதலிக்கிறது கல்யாணத்துக்குத்தானே?"என்றேன் சந்தேகமாக.

"அப்ப கல்யாணத்துல முடியாத காதலெல்லாம் காதல் இல்லையா" என்றாள்.

"இருக்க முடியாது.காதல்ங்கிறது அப்படி சொல்ல முடியாது.ஒரு வேளை கல்யாணத்தில முடியாததெல்லாம் அமரக்காதலா ,சரித்திரக் காதலா இருக்கலாம்.ஆனா ஸ்ருதி ..நம்ம காதல் ஏன் கல்யாணத்துல முடியக்கூடாது.."

கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லை..."

"why?"

"நான் சுகன் கூட படுத்துக்க முடியாது...நான் லவ் பண்ண ஒரு ஆள் கூட செக்ஸ் வச்சுக்க முடியாது..."

"What do you mean? கல்யாணம்னா செக்ஸ் மட்டும்தானா? Ridiculous செக்ஸ் வச்சுக்காம இருந்தா கல்யாணம் பண்ணிப்பயா?"

"செக்ஸ் இல்லாம... நாம கல்யாணம் பண்ணிக்கும்போது, என்கிட்டேயிருந்து இப்ப இருக்கிறதைவிட என்ன கூடுதலா கிடைக்கப்போகுது உனக்கு?"

"ஏன் இப்ப வச்சிருக்க அன்பையும்,அண்டர்ஸ்டாண்டிங்கையும் தொடரலாமே?"

"But அதுல நீயும் நானும் நமக்கு வரப்போற இன்னொரு காதலை இழக்க வேண்டியிருக்கும்"

"புரியல"

"ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் ஒண்ணுமே தெரியாம,கல்யாணம் பண்ணி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்ககூடிய முக்கியமான ஈர்ப்பான செக்ஸையும் அனுபவிச்ச பிறகு, எதிர்பார்ப்பு தேவையில்லாத போது, ஒரு சிநேகம் அன்பு காதல் வருதே...காலைல அஞ்சு மணிக்கு அம்மா எழுந்திருக்கும்போது...எழுந்திருச்சு காய்கறி நறுக்கிக் கொடுத்து,உதவி செஞ்சு...எந்த ஈகோவும் இல்லாம I love that love சுகன்...ஆனா காதல்ங்கிறதுல செக்ஸ் இல்லாத நம் காதல்ல ஏதோ ஒரு எதிர்பார்ப்புல,நம்ம இரண்டு பேரும்...நீ எப்படியோ நான் அப்படிதான் உனக்காக என் நல்ல பக்கத்தைத் தான் காட்டிட்டு வந்திருக்கேன்...கல்யாணாத்துக்கப்புறம்...செக்ஸூக்கப்புறம் உன்னை என்னால Adjust பண்ண முடியாமப் போலாம் இப்ப மாதிரியில்லாம...பின்ன ஏன் பழகுன...காதலிச்சேன்னு சொன்னன்னு நீ கேப்ப...என்னைய விரும்புற ஆணா,இத்தனை பெண்களுக்கு நடுவில் என்னை விரும்பின ஆணை,எனக்கு ஒரு தனி கவனிப்பை மரியாதைகளை, என் Taste ஐ தெரிஞ்சுக்கிட்ட ஒரு ஆணை,இதெல்லாம்விட எனக்கு பிடிச்ச ஆணை கல்யாணம்கிற ஒரு கடைசி பிரச்சனைக்காக,அது சொஸைட்டியினால வர்ற பிரச்சனையாலோ, இல்ல வேற எந்தமாதிரியான சிக்கலுக்காக, வெறுக்க ,ஒதுக்க என்னால முடியாது...எனக்கு இந்த அனுபவம் தேவை...உன்னை இப்பவும் நான் Friend ன்னோ, brother ன்னோ சொல்லி உடனே கட் பண்ணியிருக்கலாம்...என் வர்க்கத்துல சில பேர் செய்ற மாதிரி...But, நான் உன்னை லவ் தான் பண்ணேன்...நீ விரும்புனா still இந்த அருகாமையத் தொடரலாம்...என்னோட Mentalityஐ புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன்".

மனசு கனத்தது...ஏதோ ஒரு விதத்துல இந்த இழப்பு...ஆனால் அதற்கான நாசூக்கான மறுப்பு...இப்பவும் ஸ்ருதியைச் சந்தித்த அன்று தோன்றிய ஒரு விஷயம் தான் ஞாபகம் வந்தது.ஸ்ருதி ... ரொம்ப புத்திசாலித்தனம்...ஆபத்தான புத்திசாலித்தனம் புத்திசாலியை முட்டாளாக்கும் அல்லது மேலும் புத்திசாலியாக்கும் புத்திசாலித்தனம்...தெரு முனையில் இறக்கிவிட்டேன்...அவளுடைய ஞாபகங்களை மட்டும் வைத்துக் கொண்டு...

இனி சந்திக்க பழக , தொடர அவளுகிருக்கும் மனநிலை எனக்கிருப்பதாய் தோன்றவில்லை.
Anyway...ஒரு வித்யாசமான அனுபவம் மட்டும் ஞாபகங்களுடன்.

Monday, December 10, 2007

தவிப்பு...

காணும் பொருட்கள் எல்லாம்
உன் நினைவைத் தூண்டுகிறது....
கண நேரந்தான் என்றாலும்
கனமான நேரமாய் கனக்கிறது....
இதுவரை நாம் அனுபவிக்காத பிரிவு
ஒன்றுமே செய்யத் தோன்றாத இறுக்கம்..
உன் வரவை எதிர்பார்ப்பது மட்டுமே
என் பிரதான வேலையாய்...
இந்த நிமிடம் நீ என் செய்வாய்
என்பது மட்டுமே என் எண்ணமாய்...
கலங்கின கண்களோடு கையசைத்தது
அப்படியே என் கண்களில்...
உன் நினைவுகளும் எனைச்சுற்றுமோ
எண்ணும் போதே ஒரு கலக்கம்....
என்றாவது என எதிர்பார்த்தது தான்
அது இன்றாகிப் போனதில் ஒரு தவிப்பு...
இனி இது வாடிக்கையாகிப் போனாலும்
இன்றைய நாளின் தவிப்பு மறக்காது....
இதோ... நீ வரும் நேரம் நெருங்க.....
கண் இமைக்கும் நேரதாமதத்தையும் விரும்பாமல்....
இமைக்காத கண்களோடு வழியில்விழி வைத்து
வாசல் பார்க்கிறேன்......
இதோ கொட்டும் அருவியின் சிரிப்புடன்...
ஏதோ சாதித்து விட்ட பெருமிதத்துடன்....
எனை அணைக்கத்துடிக்கும் கரங்களுடன்.....
அம்மா..என கட்டிகொள்கிறாள்.....
முதல் நாள் பள்ளி சென்று திரும்பும்.....என் அன்பு மகள்.....
இது வரை இருந்த தவிப்பு
பெருமையாய்...
பரவசமாய்.....
பெருமிதமாய்...மாறியது அக்கணம்.

Sunday, December 9, 2007

நீ மட்டும்தான்!

பக்கம் பக்கமாய்
ஆயிரம் படித்தபின்னும்..
நினைவில் நிற்பது...
நிஜத்தில்..
நீ மட்டும்தான்..

மாயமான சிட்டு....

வெடிக்கிறதே..
காதல்மொட்டு..
கன்னியவள் பார்வை பட்டு...
அவளிதழ்களில் தேன் சொட்டு...
எனக்களித்தாள் வெட்கம் விட்டு..
வெண்டைவிரல் தொட்டு..
மார்பில் கோலமிட்டு..
மாயமான சிட்டு..

அம்மா!!

நன்றியம்மா
அம்மா
உந்தனுக்கு நன்றியம்மா

எனை பெற்றெடுத்து
உத்தமியே
உந்தனுக்கு
நன்றியம்மா...

உன் உதிரத்தை
பாலாக்கி
எனக்கு ஊட்டியவளே..

உன் கடன அடைக்க
எனக்கு
ஜென்மாதி ஜென்மம்
எடுத்தாலும்
போததம்மா..

Friday, December 7, 2007

காதலா , காமமா???

மனதைக் கொடுத்தபின்னும்..
திருமணத்தின் முன்னே..
தேகம் தர பெண்மறுப்பாள்..

மனதைப்பெற்றபின்னும்..
திருமணத்தின் முன்னே..
தேகம் பெற ஆண் தவிப்பான்..காதல்.

மகளே! என் அருகில் வா!

சிதறுகிறதே..
உன்
புன்னகை முத்துகள்..
அள்ளியதை..
சேர்த்திடவா..
ஆசையிலே..
கோர்த்திடவா..
அழகிய..
ஆருயிர்மகளே..
மெல்ல மெல்ல நடை பழகி
அப்பா அருகே வா...

பூகம்பம் ஆவதெப்போ?

பூகம்பம் ஆவதெப்போ?

பெண்புதுமைகள்
செய்வதெப்போ....???

அடிமைவிலங்கதனைபெண்ணேநீ
அறுத்தெறிவதெப்போ....???

கலங்கிய விழிகளது கண்ணீரை
துடைப்பதெப்போ....???

அடிப்படியை விட்டு நீ
அகிலத்தைபார்ப்பதெப்போ....???

உன் அறிவால் நீ
உலகத்தைஆழ்வதெப்போ....???

தன் மாணம் உள்ளவளாய் தரணியில்
நீ எழுவதெப்போ....???

அடிகண் முன்னே உன்னை உமிழ்கிறான்
நீ கை கட்டிநிற்பதுவோ....???

...அடிபெண்ணே இன்னும் என்னபார்த்திங்குநிற்கிறாய்....???

என் ரசனை!

நான் ரசித்த கதைகள், கவிதைகளை தொகுத்து பதிவிட நினைத்து துவங்கிய வலைத்தளம்.
நான் ரசித்ததை என்னுடன் சேர்ந்து நீங்களும் ரசிக்கலாம்! உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்தும் கொள்ளலாம்!
பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டவும் தயங்க வேண்டாம்.